2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சிவில் இயக்கங்களைக் கட்டமைப்பதிலும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் தீவிரம்காட்டி வந்தவர் மனித உரிமைச் செயற்பாட்டாளரான சண் மாஸ்டர் என்கிற விஜேந்திரகுமார். இறுதி யுத்தத்தில் போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. மன்றத்துக்கு அனுப்பினார் என்ற குற்றச்சாட்டில் ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் எழுந்த அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலிருந்து தப்பித்து, சிறிதுகாலம் தலைமறைவாக இருந்து, 2014-ன் இறுதியில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Advertisment

s

இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது நடந்துள்ள வெடிகுண்டு தாக்குதலை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

இதற்குமுன் தமிழர்களின் தேவாலயங்களிலும் கோயில்களிலும் இலங்கை அரசே தாக்குதல் நடத்தி தமிழர்களைக் கொன்று குவித்தது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இப்படியானவொரு பயங்கரவாத தாக்குதல் இலங்கை அரசு அல்லாத பிரிதொரு குழுவினரால் நடத்தப்பட்டுள்ளது. இதிலும் அப்பாவி தமிழ் மக்கள்தான் அதிகளவில் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள். பயங்கரவாத அமைப்புகள் எதுவாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த இன விடுதலைப் போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை இன்று இலங்கையும் அதன் பங்காளி நாடுகளும் உணர்ந்துகொள்வது நல்லது.

இந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இலங்கை பாதுகாப்பு மற்றும் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?

Advertisment

இலங்கை அதிபர் சிறிசேன, அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து ராணுவத்துக்கு அதிகளவில் அதிகாரங்களை வழங்கியுள்ளார். இதை ஒருவாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழர்கள் இன அழிப்புக்கு நீதிகோரி நடத்திவரும் போராட்டங்களை அடக்குவதில் கவனம் செலுத்துவார்கள். தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் அதிபர் சிறிசேனவிற்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரம் அடையும். இதை மகிந்த ராஜபக்சே ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவார்; இந்த தாக்குதல் எதிர்வரும் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும்.

s

2014-ல் ஐ.நா.மன்றத்திற்கு பொய்யான சாட்சியங்களை நீங்கள் அனுப்பி வைத்ததாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கையிலுள்ள அனைத்துலக நாடுகளின் தூதுவர்களை அழைத்து முறையிட்டுள்ளதே?

இலங்கை அரசு என்மீது குற்றம் சுமத்தியதை நான் மறுக்கின்றேன். இறுதி யுத்தத்தின் நாட்களை பெரும் வலிகளுடன் அந்த மண்ணிலே சந்தித்த எமது மக்கள் அனைவரும் சாட்சியாளர்களாக இருக்கும்போது பொய் சாட்சியங்களை அனுப்பவேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை.

ஐ.நா. மன்றத்தில் மீண்டும் கால அவகாசம் தரப்பட்டிருப்பதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நீதியை பெற்றுத்தரும் என நீங்கள் நம்புகிறீர்களா?

காலஅவகாசத்தைப் பெற்றுக்கொள்வதன் மூலம், பிரச்சினையின் தீவிரத் தன்மையை நீர்த்துப்போகச் செய்துவிட முடியும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு. அதேவேளையில் சர்வதேச நாடுகளும் தமது பூகோள நலன்சார்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்க விரும்பவில்லை. இலங்கையைப் பாதுகாப்பதற்கே அவை முற்படுகின்றன. கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் சொல்லப்பட்ட எதனையும் நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டாத இலங்கை அரசாங்கம், தற்போதைய தீர்மானத்துக்கும் இணை அனுசரணை வழங்கியிருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தப்போவதில்லை. இலங்கை அமைச்சர்களே இதனைத் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள். அதாவது, படையினர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பதும், சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்பதும் இலங்கை அரசின் உறுதியான நிலைப்பாடு. இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது?

யுத்தகாலம் துவங்கி இப்போதுவரை ஈழத்தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் தற்போதைய நிலை என்ன? அவர்களுக்கு என்ன ஆனது?

காணாமல் ஆக்கப்படுவதை இலங்கை அரசு ஒரு போர் ஆயுதமாகவே பயன்படுத்தி வருகிறது. இதுவரை இலங்கை அரசப் படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட... சுமார் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாமல் அவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள். 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் நிராயுதபாணிகளாக இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த குழந்தைகள்கூட காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமது உறவுகளுக்கு நீதிவேண்டி அவர்கள் போராடி வருவது பல ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது.

சிங்கள ராணுவத்தினரும் சுமார் 4000-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறதே?

விடுதலைப்புலிகளின் சில வெற்றிச் சமர்களில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கான ராணுவத்தினரின் உடலங்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். அவற்றை சர்வதேச போர் விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கை அரசிடம் விடுதலைப் புலிகள் கையளித்தபோது, அந்த உடலங்களை பொறுப்பேற்க இலங்கை அரசு முன்வரவில்லை. காரணம், தோல்வி வெளிப்பட்டுவிடும் என்பதே. இவ்வாறு யுத்த முனைகளில் இறந்த ராணுவத்தினரையே, தற்போது காணாமல் போனோர் பட்டியலில் இணைத்து மோசடி செய்துள்ளது இலங்கை அரசு.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் விரிவடைந்து வருவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். உண்மையிலேயே அங்கு சீனாவின் ஆதிக்கம் எந்த அளவில் உள்ளது?

சீனா தனது கனவுத் திட்டமான பட்டுப்பாதையை நிறைவேற்றிக் கொள்வதையே விரும்புகிறது. அண்மையில், எமது தாயகப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர், மன்னாரில் உள்ள கடற்படை முகாமிற்கு சென்று இலங்கை-இந்தியாவின் எல்லையாக விளங்கும் ராம் சேதுமடத் திட்டுவரை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருக்கிறார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை மீது இந்தியா சரியான பிடியை வைத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது தமிழர்களின் போராட்டம் மட்டுமல்ல; இந்தியாவின் பாதுகாப்பும்தான். ஈழத்தமிழர்களின் பாதுகாப்பில் இந்தியாவின் பாதுகாப்பும் உள்ளது என்பதை ஏற்று இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் அங்கீகரிக்க முன்வர வேண்டும்.

-இரா.இளையசெல்வன்

படம் : ஸ்டாலின்